தொழிலதிபர் வீட்டில் 43 சவரன் திருடிய 2 வேலைக்கார தம்பதிகள் சுற்றிவளைத்து கைது

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). தொழிலதிபர். இவரது மனைவி சுஜாதா (40). இவர்களது வீட்டில், விக்னேஷ் (27) அவரது மனைவி சத்யா (30), சத்யாவின் தங்கை லட்சுமி (28) அவரது கணவர் பிரகாஷ் (26) ஆகியோர் வீட்டு வேலை செய்தனர். அவர்கள், கொரட்டூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 40வது தெருவில் வாடகை வீட்டில் வசித்தனர். இதற்கிடையில், கடந்த 10ம் தேதி சந்திரசேகர் வீட்டில், விக்னேஷ்  ரூ.1000 திருடியதாக கூறப்படுகிறது. இதனால் சந்திரசேகர், அவர்களை வேலையை விட்டு நீக்கினார். இந்தவேளையில், கடந்த 20ம் தேதி சுஜாதா, ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்றார். அப்போது அங்கு வைத்திருந்த 43 சவரன் தங்க நகைகள் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

உடனே, தனது வீட்டில் வேலை செய்த விக்னேஷ், மனைவி சத்யா ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் சுஜாதாவை அவதூறாக பேசினர். இதுகுறித்து கொரட்டூர்  இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சந்திரசேகர் வீட்டில் நகைகளை திருடியது, விக்னேஷ், அவரது மனைவி சத்யா, சத்யாவின் தங்கை லட்சுமி,  அவரது கணவர் பிரகாஷ் என தெரிந்தது. மேலும், அவர்கள் நகைகளை திருடி கொண்டு, சொந்த ஊர் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார், திருவண்ணாமலைக்கு சென்று, அங்கு தலைமறைவாக இருந்த 2 தம்பதிகளையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, 27 சவரன் நகைகள்,  திருடிய பணத்தில் வாங்கிய பைக்,  ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1.8 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: