குடியரசு தினத்தில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை: பெண் காவலரின் கணவர் உள்பட 13 பேர் கைது; 1480 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆவடி: ஆவடி டாஸ்மார்க் பாரில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் போலீசாரின் கணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1282 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில், குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை புறநகரில் உள்ள டாஸ்மாக் பார்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை ஜோராக நடந்தது. இதையடுத்து ஆவடி, காமராஜ் நகர், 3வது தெருவில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, சென்னையில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று முன்தினம் இரவு கிடைத்தது.

அதன்பேரில் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அதில், 2 ஊழியர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். மேலும், அங்கு குடிமகன்கள் வரிசையில் நின்று, மதுபானங்களை வாங்கி கொண்டிருந்தது தெரிந்தது. உடனே போலீசார் அங்கு அதிரடியாக சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள், மதுபாட்டில்களுடன் தப்பியோடினர்.

இதையடுத்து போலீசார், பாரில் சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைத்திருந்த 30 அட்டை பெட்டிகளில் இருந்த 1282 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்த 2 ஊழியர்களை கைது செய்து, மதுபானங்கள் மற்றும் ஊழியர்களை அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் டில்லிபாபு  வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், பாரில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது எழும்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த சிக்கந்தர் (33),  கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், குரு வினாயக பள்ளியை சேர்ந்த பெருமாள் (43) என தெரிந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான பார் உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர். இதில், சிக்கந்தர் மனைவி ஜெகமத்பானு, அண்ணா சாலையில் மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியரசு தின விடுமுறை நாளான நேற்று முன்தினம் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக எஸ்பி வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர், பொன்னேரி, ஆர்கே பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 198 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: