கோவாக்சின், கோவிஷீல்டு சந்தை விற்பனைக்கு அனுமதி

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டை முறையாக சந்தையில் விற்பனை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் முறையான சந்தை விற்பனைக்கு அனுமதி கேட்டு சீரம் நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங், கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கூடுதல் தரவுகள் மற்றும் ஆவணங்கள் கேட்கப்பட்டதை அடுத்து நிறுவனம் சார்பில் சமீபத்தில் அவை சமர்பிக்கப்பட்டன. கடந்த 19ம் தேதி இந்திய  மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் நிபுணர் குழுவானது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை நிபந்தனைக்குட்பட்டு சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை முறையாக சந்தையில் விற்பனை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு நேற்று அனுமதி அளித்துள்ளது. புதிய மருந்து மற்றும் மருத்துவ பரிசோதனைகள் விதிகள் 2019ன் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு விலை ரூ.275 அளவுக்கு குறையும். தற்போது நடந்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தரவுகளை சமர்பிக்க வேண்டும், நோய் தடுப்புக்கு பின் ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

* அதிகரிக்கும் தொற்று

ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,86,384 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,03,71,500 ஆக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை ஒரே நாளில் புதிதாக 573 உயிரிழப்புக்கள் பதிவானதை அடுத்து கொரோனா உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 4,91,700 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 22,02,472 ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 5.46 சதவீதமாகும்.

* 400 மாவட்டங்களில் அதிகம்

ஒன்றிய சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ‘‘கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ராஜஸ்தானில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, ஒடிசா, அரியானா, மேற்கு வங்க மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது கடந்த 26ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 400 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா தொற்று பாதிப்பு 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 141 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதத்துக்குள் உள்ளது. முன்பு இருந்த கொரோனா அலைகளோடு ஒப்பிடுகையில் இறப்பு எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது,” என்றார்.

Related Stories: