அரசியலுக்காக ஆசாத்துக்கு பத்ம விருது ஒன்றிய அரசு மீது மொய்லி குற்றச்சாட்டு

பெங்களூர்: குடியரசு தினவிழாவையொட்டி 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்தது. அதில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. புத்ததேவ் பட்டாச்சார்யா விருதை ஏற்க மறுத்து விட்டார். குலாம் நபிக்கு விருது வழங்கப்படுவது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறியதாவது: குலாம் நபிக்கு பத்ம பூஷண் விருது வழங்குவது என்பது பிரதமர் மோடி எடுத்த அரசியல் முடிவு. இதில் வேறு எந்த அளவு கோலின் அடிப்படையிலும்  அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த விருதை குலாம் நபி ஆசாத் பெறுவது கட்சியின் நலனை பாதிக்கும். முதல்வர், ஒன்றிய அமைச்சர் பதவி வகித்த அனுபவம் உடையவர் ஆசாத். எனவே, சாதக, பாதகங்களை ஆராய்ந்து விருதை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து அவர் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* கரண் சிங் ஆதரவு

குலாம் நபிக்கு விருது வழங்கும் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் கரண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குலாம் நபிக்கு விருது வழங்கப்பட்ட விவகாரத்தில் தேவை இல்லாத சர்ச்சை உருவாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. தேசிய விருதை கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்னை ஆக்கக்கூடாது. அதை விடுத்து அவரை சீண்டுவது தவறு,’ என்று கூறி உள்ளார்.

Related Stories: