சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட அருணாச்சல பிரதேச சிறுவன் இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: அருணாச்சல் பிரதேச மாநிலம், அப்பர் சியாங் மாவட்டத்தில் உள்ள ஜிடோ என்ற இடத்தை சேர்ந்த சிறுவன் மிரம் தரோன் (17). கடந்த 18ம் தேதி சீன எல்லை பகுதி அருகே மாயமான சிறுவனை சீன ராணுவம் கடத்தி சென்றதாக கூறப்பட்டது. சிறுவன் மிரம் தரோனை மீட்டு தருமாறு இந்திய ராணுவத்தினர் ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.  சிறுவன் படம் மற்றும் அவனை பற்றிய விவரங்கள் சீன ராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரன் ரிஜிஜூ நேற்று முன்தினம் தெரிவித்தார். சிறுவனை மீட்டு விட்டதாகவும், உரிய நடைமுறைகளை பின்பற்றி அவனை  ஒப்படைப்போம் என சீன ராணுவம் உறுதியளித்ததாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த சிறுவனை சீன ராணுவம் நேற்று இந்தியாவிடம் ஒப்படைத்தது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் கிரன் ரிஜி டிவிட்டரில் பதிவிடுகையில், சிறுவனுக்கு  மருத்துவ சோதனை  நடத்தப்பட்டு அதன் பின்னர் அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம்  என்றார்.

Related Stories: