67 ஆண்டுகளுக்கு பிறகு டாடா நிறுவனத்தின் வசமானது ஏர் இந்தியா: அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைப்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து, 67 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நேற்று டாடா நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. கடன் சுமையினால் சிக்கி தவித்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கியதால், நிர்வாக ரீதியாக சிக்கல் இருந்ததால் இதனை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனிடையே, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் முன்வந்தது. ரூ.18,000 கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் கடந்த அக்டோபர் 8ம் தேதி வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாகவும், மீதமுள்ள ரூ.15,300 கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை ஏற்கவும் டாடா நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அக்டோபர் 25ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்கும் நடைமுறை முடிந்ததாக ஒன்றிய அரசின் முதலீட்டு துறை செயலர் துகின்காந்த் நேற்று தெரிவித்தார். டாடா குழுமத்தை சேர்ந்த டலேஸ் தனியார் நிறுவனத்துக்கு ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளையும் மாற்றம் செய்ததாகவும், இனிமேல், டலேஸ் தனியார் நிறுவனமே ஏர் இந்தியாவின் நிறுவன உரிமையாளர் ஆவார் என்றும் அவர் கூறினார். டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஜேஆர்டி டாடா கடந்த 1932ம் ஆண்டு தொடங்கினார். அதன் பிறகு 1946ம் ஆண்டில் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1948ம் ஆண்டு சர்வதேச விமான சேவையை தொடங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தின் 49% பங்குகள் ஒன்றிய அரசிடமும், 25% பங்குகள் டாடா நிறுவனத்திடமும், இதர பங்குகள் பொதுமக்களிடமும் இருந்தது. பின்னர் 1953ம் ஆண்டில் இந்நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது. தற்போது அதை தொடங்கிய டாடா குழுமத்திடமே ஏர் இந்தியா நிறுவனம் 67 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது.

* உலகத் தரம் வாய்ந்த விமான சேவை

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் விடுத்த அறிக்கையில், `ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்துடன் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த விமான சேவை வழங்க தயாராக இருக்கிறோம். ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களை டாடா குழுமத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம். அனைவரும் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம்,’ என்று கூறியுள்ளார்.

* மொத்தம் 141 விமானங்கள்

ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 141 விமானங்கள் டாடா நிறுவனத்துக்கு கிடைக்கும். இதில், 44 குத்தகைக்கு எடுத்தவை, மீதமுள்ளவை சொந்தமானவையாகும். இது, கடந்த 2003-04ம் ஆண்டுக்கு பிறகு, முதல் தனியார் மயமாக்கலாக இருந்த போதிலும், டாடா குழுமத்தில் 3வது விமான நிறுவனமாக ஏர் இந்தியா இணைந்துள்ளது. இதற்கு முன்னர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் ஏசியா இந்தியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களை கூட்டு முதலீட்டில் டாடா நிறுவனம் நடத்தி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 117 விமானங்கள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 24 விமானங்கள், உள்ளூர் விமான நிலையங்களில் 4,000 உள்ளூர், 1,800 சர்வதேச விமானங்கள் தரையிறங்குதல், நிறுத்துமிடம், லண்டனில் உள்ள ஹீப்ரூ போன்ற சர்வதேச விமான நிலையத்தில் 900 முறை விமானங்கள் தரையிறங்குதல் போன்றவற்றுக்கான அனுமதியும் டாடா நிறுவனத்துக்கு கிடைக்க உள்ளன.

Related Stories: