5ஜி தொழில்நுட்பத்தை எதிர்த்து வழக்கு நடிகை ஜூகி சாவ்லாவுக்கு விதித்த அபராதம் ரூ.2 லட்சமாக குறைப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பத்தை தொடர்ந்து 5ஜி தொழில்நுட்ப சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தால் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த தொழில்நுட்பத்தை அனுமதிக்க கூடாது என்று பிரபல நடிகை ஜூகி சாவ்லா உள்பட 4 பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த  நீதிபதி, ‘இவ்வழக்கு வெற்று விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட நடைமுறையை அவமதிப்பதாக உள்ளது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தததுடன், ஜூகி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதித்தார்.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூகி சாவ்லா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விபின் சங்கி, ஜஸ்மீட் சிங் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் பிறப்பித்த உத்தரவில், 5ஜி தொழில்நுட்பத்தை நடிகை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார் என்று கூறி அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக குறைத்தனர். மேலும், தனி நீதிபதி தனது உத்தரவில் ‘வெற்று விளம்பரத்துக்காக நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்’ என்று கூறியுள்ள கருத்தையும் நீக்கினர்.

Related Stories: