அரபு எமிரேட்சில் 6 மாதமாக கொரோனாவுடன் போராடி உயிர் பிழைத்த இந்திய களப்பணியாளர்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனாவால் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தியாவை சேர்ந்த களபணியாளர் அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் நாயர் (38). இவர் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் உள்ள எல்எல்எச் மருத்துவமனையில் கொரோனா பணிக்குழுவில் ஆபரேஷன் தியேட்டர் டெக்னிசியனாக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு ஜூலையில்  இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஜூலை 31ம் தேதி முதல் உயிர்காக்கும் உபகரணங்கள் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் அவருக்கு மாரடைப்பு, நுரையீரல் பாதிப்பு  உட்பட பல்வேறு உடல்நலக்குறைபாடுகள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தேறியதை அடுத்து அவருக்கு 118 நாட்களுக்கு பின் உயிர்காக்கும் உபகரணங்கள் நீக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு பின் அதிசயக்கதக்க வகையில், அவர் பூரண குணமடைந்து கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவரது பணி மற்றும் கொரோனாவோடு போராடி மீண்ட அவரது மனதிடத்தை பாராட்டி, விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் அவருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் அவர்களது குழந்தையின் கல்வி செலவையும் நிறுவனம் ஏற்றுள்ளது.

* வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு தொற்று

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் சமீப நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: