இந்தியாவில் மனித உரிமை நிலவரம் கவலை அளிக்கிறது: முன்னாள் துணை ஜனாதிபதி வேதனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்தியா-அமெரிக்கா முஸ்லிம் கவுன்சில் நேற்று முன் தினம் நடத்திய காணொலி குழு விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, 4 அமெரிக்க எம்பி.க்கள் இந்தியாவின் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் குறித்து கவலைத் தெரிவித்தனர். அப்போது பேசிய அன்சாரி, ``சமீப காலத்தில் தேசியவாத கொள்கையை மறுக்கும் மற்றும் கற்பனையான புதிய தேசியவாத கலாசார நடைமுறைக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள், நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இது மக்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்தி பார்க்கிறது. இது சகிப்புத்தன்மையின்மை, பிறரைத் தூண்டுதல், அமைதியின்மை, பாதுகாப்பின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இதனால், இந்தியாவில் தற்போது உள்ள மனித உரிமைகள் நிலவரம் கவலை அளிப்பதாக உள்ளது,’’ என்று கூறினார்.

இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்ட போது இந்தியாவுக்கு எதிராக நின்ற அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் எம்பி. எட் மார்கே கூறுகையில், ``இந்தியாவில் சிறுபான்மையினரின் மத வழிபாடுகளை ஒன்றிய அரசு தொடர்ந்து தாக்கி வருவது, நாட்டில் மத கலவரம், வன்முறை ஏற்பட வழி வகுக்கும். சமீப காலமாக, வெறுப்பு பேச்சு, வெறுக்கத்தக்க நடவடிக்கை, தேவாலயங்களுக்கு தீ வைத்தல், மசூதிகள் சூறையாடல், மதக் கலவரம் பற்றி ஆன்லைன் ஊடகங்களில் அதிகளவில் பரவுகின்றன,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: