சில்லி பாய்ண்ட்...

* கொரானா பரவல் காரணமாக கடந்த  2 ஆண்டுகளாக நடத்தாமல் இருக்கும் ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து நேற்று பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. ஐபிஎல் தேதி இறுதி செய்யப்பட்டதும், இந்த ஆண்டு ரஞ்சி தொடர் நடக்கும்  தேதி முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

* இந்திய அணியின் வேகம் முகமது ஷமி, ‘ இப்போதைக்கு கேப்டன் பதவி குறித்து அதிகம் யோசிக்கவில்லை. என்னிடம் கூடுதலாக எந்த பொறுப்பு தொடுத்தாலும் அதை செய்ய தயாராக இருக்கிறேன். இந்திய அணியின் கேப்டன் பதவியை யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள். அதே நேத்தில் அது மட்டும் என் எதிர்பார்ப்பல்ல, அணிக்கு முடிந்தவரை சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்’ என்று கூறியுள்ளார்.

* ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான  ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தைக் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று கான்பெராவில் தொடங்கியது. முதலில் களமிறங்கிய ஆஸி முதல் ஆட்ட நேர முடிவில் 97ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 327ரன் குவித்தது. கேப்டன்  மெக் 93, ரேச்சல் 86, ஆஷ்லி 56, தஹிலா 52ரன் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் கேத்ரின், ஷோபி ஆகியோர் தலா 3விக்கெட் எடுத்தனர்.

* ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1964ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டன் சரண்ஜித் சிங்(90). அவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள உனா நகரில் தனது இளைய மகன் குடும்பத்தினருடன்  வசித்து வந்தார். வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த சரண்ஜித் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஹாக்கி சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரண்ஜித் 1960ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி, 1962ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணிகளில் பங்காற்றியவர்.

Related Stories: