தேனி நியூட்ரினோ திட்டம் பற்றி நிலவர அறிக்கை தாக்கல் ஒன்றிய அரசுக்கு அனுமதி

புதுடெல்லி: தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கடந்த 2011ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதில், சுமார் 2.5 கிமீ பரப்புக்கு சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் அங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் அத்தனையும் அழியும் என இயற்கை ஆர்வளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘இந்த விவகாரத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதால் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,’ என கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, மேற்கண்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘தேனி நீயூட்ரினோ ஆய்வு திட்டம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்படும் வரை தான் திட்ட நடைமுறை அனைத்திற்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், டாடா நிறுவனத்தின் சார்பாக அந்த ஒப்புதலை பெற்றுவிட்டால் திட்டம் மீண்டும் செயல்படுத்தபடும். அதனால், இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திட்டம் தொடர்பான பாதிப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டியா, நீதிபதிகள் முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில், ‘நியூட்ரினோ திட்டம் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே வழங்கிய உத்தரவுக்கு பிறகு ஒரு சில முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என தெரிவித்தார். இதையடுத்து, அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: