பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தயார்: ராகுல் காந்தி அறிவிப்பு

அமிர்தசரஸ்: கட்சி தொண்டர்கள் விரும்பினால் பஞ்சாப் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தயார் என்று ராகுல் காந்தி கூறினார். பஞ்சாப் சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலையொட்டி அந்த மாநிலத்தில் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியான காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு கடுமையாக முயன்று வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒருநாள் பயணமாக  பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அமிர்தசரஸ் வந்த ராகுலை விமான நிலையத்தில் முதல்வர் சரண்ஜித் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ஆகியோர் வரவேற்றனர்.

பிரசித்தி பெற்ற பொற்கோயிலுக்கு சென்று ராகுல் வழிபாடு நடத்தினார். அவருடன் கட்சியின் வேட்பாளர்களும் சென்றனர். கோயிலிலேயே உணவு உண்டார். பஞ்சாப் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 109 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஜலந்தரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக ராகுல் காந்தி   பேசியதாவது: எப்போதும் ஒரே ஒருவரால் தான் கட்சியை வழிநடத்த முடியும். 2 பேர்களால்  வழிநடத்த முடியாது.

வழக்கமாக நாங்கள் இதுபோன்று  செய்ய மாட்டோம். பஞ்சாப் காங்கிரஸ் தொண்டர்கள்  விரும்பினால், சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்றால் இன்னொருவர் அவருக்கு ஆதரவு தருவதாக என்னிடம் இருவரும் உறுதிமொழி அளித்துள்ளனர். இருவரின் இதயத்திலும் காங்கிரசின் சிந்தனைகள் உள்ளன. கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிந்தவரை  சீக்கிரம் முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

* 5 எம்பிக்கள் ‘ஆப்சென்ட்’

ராகுல் காந்தியின் அமிர்தசரஸ் நிகழ்ச்சியை காங். எம்பிக்கள் 5 பேர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. கட்சி எம்பிக்கள் மணீஷ் திவாரி, ரவ்நீத் சிங் பிட்டு, ஜஸ்பீர் சிங், பிரினீத் கவுர் உள்பட 5 பேர் ராகுல் காந்தியின் தலைமையை எதிர்த்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

* பாலோயர் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைப்பு டிவிட்டர் மீது குற்றச்சாட்டு

டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு  ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘டிவிட்டரில் என்னை பின்தொடர்பவர்கள் (பாலோயர்ஸ்) எண்ணிக்கை மாதத்திற்கு 2 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் அது 2,500 ஆக குறைந்துள்ளது. என்னை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1.9 கோடி என அப்படியே மாறாமல் உள்ளது. டிவிட்டரில் வேலை செய்யும் எனது நண்பர்கள் மோடி அரசின் அழுத்தம்தான் இதற்கு காரணம் என கூறுகின்றனர். இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள டிவிட்டர் நிறுவனம், ‘ராகுல் காந்தியை பின்தொடர்வோர் எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் இல்லை. உண்மையான கணக்குகளை மட்டுமே டிவிட்டர் தனது தளத்தில் அனுமதிக்கும். விதிமுறைகளுக்கு மாறான கணக்குகள் நீக்கப்படுகின்றன,’ என கூறியுள்ளது.

* 5 கணவன் - மனைவி ஜோடிகள்

கோவா சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுவதால் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதைவிட சுவராஸ்யமான விஷயம் என்னவெனில், இத்தேர்தலில் 5 ஜோடி கணவன்- மனைவிகள் போட்டியிடுகின்றனர். இதில் அதிகபட்சமாக பாஜ சார்பில் 2 ஜோடிகளும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு ஜோடியும் போட்டியிடுகின்றனர். மாநில அமைச்சர் விஷ்வஜித் ரானே வல்போய் தொகுதியிலும், அவர் மனைவி தேவியா ரானே போரிம் தொகுதியிலும், அத்னாசியா மான்செராட்டே பனாஜியிலும் அவர் மனைவி ஜெனிபர் தலேகாவ் தொகுதியிலும் பாஜவால் களமிறக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் சந்திரகாந்த் கியூபெம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மனைவி சாவித்ரிக்கு பாஜ டிக்கெட் வழங்கவில்லை. இதனால் சங்குயெம் தொகுதியில் சாவித்ரி சுயேச்சையாக களம் காண்கிறார்.

* காங்கிரஸ் சார்பில் கலாங்குட் தொகுதியில் மைக்கேல் லோபோ நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மனைவி டிலைலாவுக்கு சியோலிம் தொகுதி காங். சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இருவரும் சமீபத்தில் தான் பாஜவில் இருந்து காங்கிரசுக்கு வந்தனர்.

* அல்டோனா தொகுதியில் திரிணாமுல் காங். வேட்பாளராக கிரன் கண்டோல்கர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி கவிதாவுக்கு திவிம் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

* உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் மனுதாக்கல்

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த மாதம் 14ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் கட்டிமா தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவை தாக்கல் செய்யும்முன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புஷ்கர் சிங்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் புவன் சந்திரா கப்ரி மீண்டும் போட்டியிடுகிறார்.

*  உத்தரகாண்ட் காங்.  முன்னாள் தலைவர் பாஜ.வுக்கு தாவல்

உத்தரகாண்டில் வருகிற பிப்ரவரி 14ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்  முக்கிய தலைவர்கள் பலர் கட்சி தாவலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இம்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கிஷோர் உபத்யாய். இவர் பாஜ தலைவர்களை சந்தித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் அக்கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியானதால், காங்கிரசில் இருந்து இவர் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. இந்நிலையில் கிஷோர் உபத்யாய் நேற்று பாஜவில் இணைந்தார். இவர் கடந்த 2002 மற்றும் 2007ம் ஆண்டு தெக்ரி தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜ அவரை மீண்டும் இதே தொகுதியில் நிறுத்தும் என தெரிகிறது.

Related Stories: