மகளிரணி நிர்வாகியை அவதூறாக பேசியதாக வழக்கு அதிமுக எம்எல்ஏ உள்பட 3 பேர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர் அதிமுக பெண் நிர்வாகி ரீட்டா. இவர் திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, தொகுதி அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் உள்பட 4 பேர் மீதும் புகார் செய்திருந்தார். இதன் அடிப்படையில் நகர் போலீசார், அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் தலைமறைவான எம்எல்ஏ உள்ளிட்டோரை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் மற்றும் ராமையா பாண்டியன், முனியாண்டி ஆகிய 3 பேர் திருவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி (பொ) தனசேகரன், 3 பேரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே எம்எல்ஏ மான்ராஜ் மீது புகார் கொடுத்த அதிமுக பெண் நிர்வாகி ரீட்டா, திருவில்லிபுத்தூரில் உள்ள நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் நேற்று 2 மணி நேரம்  ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

Related Stories: