சேலத்தில் நகை, பணம் டெபாசிட் பெற்று ரூ.10 கோடி மோசடி செய்த ஜூவல்லரி அதிபர் மனைவியுடன் தலைமறைவு: நள்ளிரவில் கடையை காலி செய்துவிட்டு ஓட்டம்

சேலம்: சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(40). இவரது மனைவி லலிதா(38). இருவரும் சேலம் டவுனில் நகைக்கடை வைத்திருந்தனர். இந்த கடையில் 6 பவுன் நகை டெபாசிட் செய்தால், மாதம் ரூ.2500, ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனை நம்பி ஆயிரக்கணக்கான ஏழை மக்கள், நகையை டெபாசிட் செய்தனர். தொடக்கத்தில் சரியாக வட்டி கொடுத்தார். பிறகு பணம் கொடுப்பதில் காலதாமதம் செய்தார்.  இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென வீட்டை பூட்டி விட்டு தம்பதியர் தலைமறைவாகி விட்டனர். கடையும் பூட்டப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு கடைக்கு வந்த தங்கராஜ், நகைகளை காரில் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். சுமார் ரூ.10 கோடிக்கு மேல் நகை மற்றும் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பொன்னம்மாப்பேட்டை சக்திநகரில் உள்ள அவரது மாமனார் தேவராஜ் வீட்டை, நேற்று முற்றுகையிட்டனர். இந்நிலையில், தங்கராஜ்  நகைக்கடையில் இருந்து சிலருடன் சேர்ந்து நகைப்பெட்டிகளை காரில் ஏற்றிச்செல்லும் வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து, தங்கராஜ் நகைக்கடையில் ரூ.30,000, ரூ.20,000 என கட்டியதாகவும் அதை ஏமாற்றி விட்டாரே எனக்கூறி கண்கலங்கினர்.

* கடையில் நோட்டீஸ் வக்கீலிடம் தஞ்சம்

இதனிடையே தங்கராஜ் நடத்தி வந்த நகைக்கடை கதவில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உடல் நிலை சரியில்லாததால், 3 நாட்கள் விடுமுறை என்று எழுதப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் பார்த்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நகை, பணத்துடன் தப்பிய தங்கராஜ், சேலத்தில் பிரபல வக்கீலிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: