சமாஜ்வாதியுடன் ஆர்எல்டி கூட்டணி வைத்ததால் பயம்; 7% ஜாட் சமூக ஓட்டுகளை அள்ள நேரடியாக களமிறங்கிய அமித் ஷா: டெல்லிக்கு வரவழைத்து 200 தலைவர்களிடம் பேச்சு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் 7 சதவீத ஜாட் சமூக ஓட்டுகளை பெறுவதற்காக அதன் தலைவர்கள் 200 பேரை டெல்லிக்கு வரவழைத்து பாஜக மூத்த தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். மேற்கு உத்தர பிரதேசத்தில் 7 சதவீத வாக்காளர்கள் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை வாக்குகளை பெறுவதற்காக அந்த சமூகத்தின் 200 தலைவர்களை பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினார். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றாலும் கூட, பாஜகவின் மீதான கோபம் ஜாட் சமூக விவசாயிகளிடம் குறையவில்லை. இருந்தும் ஜாட் தலைவர்களை அமித் ஷா சந்தித்தது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜாட் சமூகத்தின் ஆதரவை பெற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியானது, இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி பாஜகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. காரணம் கடந்த  2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மேற்கு உத்தரபிரதேசத்தில மட்டும் 92 தொகுதிகள்  பாஜகவுக்கு கிடைத்தன. அதனால், உத்தரபிரதேசத்தில் மீண்டும் வென்று ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கை  மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேற்கு டெல்லி எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவின் இல்லத்தில் ஜாட் சமூக தலைவர்களுடன் பேசிய அமித் ஷா, ‘நாங்கள் கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் 650 ஆண்டாக நாம் ஒன்றாகப் போராடுகிறோம்.

நீங்கள் முகலாயர்களுடன் போரிட்டீர்கள்; நாங்களும்  அவர்களுடன் போராடுகிறோம். ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர்  ஜெயந்த் சவுத்ரி, இந்த முறை  தவறான வீட்டை (கூட்டணி) தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் அவருக்காக எங்கள்  கதவுகள் திறந்தே உள்ளன’ என்று ஜாட் தலைவர்களிடம் கூறினார்.  இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட  ஜாட் தலைவர்கள் கூறுகையில், ‘அமித்ஷா எங்களுக்கு உரிய மரியாதை அளித்தார். ஜாட்  சமூகத்தினர் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வார்கள்’ என்றனர். இதுகுறித்து ராஷ்டிரிய லோக் தளம் தலைவர்  ஜெயந்த் சவுத்ரி வெளியிட்டுள்ள டுவிட்டில், ‘உங்களுடைய அழைப்பு எனக்கானது அல்ல; வீடுகளையும் உடைமைகளையும் இழந்த 700 விவசாய குடும்பங்களுக்கு அழைப்பு கொடுங்கள்’ என்று விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயிகள் இறந்ததை மேற்கோள் காட்டி குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Related Stories: