இறுதிச்சடங்கு செய்ய ஆண் வாரிசு இல்லாததால் 95 வயது தந்தையின் உடலை சுமந்த 7 மகள்கள்: ராஜஸ்தானில் நெகிழ்ச்சி

ஜெய்ப்பூர்: இறுதிச்சடங்கு செய்ய ஆண் வாரிசு இல்லாததால் தங்களது தந்தையின் உடலை சுமந்து சென்ற 7 மகள்களும், அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் பாபாஜி அடுத்த படா கிராமத்தை சேர்ந்தவர் ராம்தேவ் கலால் (95). இவருக்கு ஆண் வாரிசு இல்லை. ஏழு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் திடீரென காலமானார். உள்ளூர் பெரியவர்கள், உறவினர்கள் ஆகியோர் ஒன்றுகூடி ராம்தேவ் கலாலுக்கு இறுதிச் சடங்கு செய்வது யார்? அவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது உடலுக்கு தீ மூட்டுவது யார்? என்று பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

பெரும் விவாதமாக பேசப்பட்ட இந்த விவகாரத்தின் முடிவில், ராம்தேவ் கலாலின் ஏழு மகள்களான கமலா, கீதா, மூர்த்தி, பூஜா, ஷ்யாமா, மோகனி, மம்தா ஆகியோர் தாங்களே தங்களது தந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்வதாக கூறினர். இவர்களின் இந்த முடிவுக்கு அவர்களது சமாஜத்தின் பிரமுகர்கள் மற்றும் முதியவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு, ஏழு மகள்களும் தங்களது தந்தையின் உடலை பாடையில் கட்டி தங்களது தோள்களில் சுமந்து இறுதி ஊர்வலமாக சென்றனர். ஏராளமான கிராம மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இறந்தவரின் மூத்த மகள் கமலா, தனது தந்தையின் உடலுக்கு தீ மூட்டி இறுதிச் சடங்குகளை செய்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘எங்களுக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இல்லை. ஆனால் எங்களது தந்தை எங்களை ஆண் பிள்ளைகளை போன்று வளர்த்தார். கல்வி முதல் வாழ்க்கை வரை எல்லா வகையிலும் உதவினார். எங்களது தாய் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எங்களது தந்தையின் மறைவால் நாங்கள் பெரிதும் மனவேதனை அடைந்துள்ளோம். இருந்தும், அவருக்கு நாங்கள் ஏழு பேரும் சேர்ந்து இறுதிச் சடங்கை செய்ததை நினைத்து பெருமை கொள்கிறோம்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

Related Stories: