தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை உணர்கிறோம்..! மாநில நடைமுறைகளை மதிக்கிறோம்; ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை: சென்னையில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை உணர்கிறோம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் வழக்கங்களையும், நடைமுறைகளையும், மதிப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தய் வாழ்த்து ஒலித்துள்ளது. அப்போது ஒரு சில அதிகாரிகள் எழுந்து நிற்காலம் இருக்கையிலேயே அமர்ந்துள்ளனர். நிகழ்ச்சிக்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை செலுத்தவில்லை என கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறினர்.

இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த அதிகாரிகள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதிகாரிகளின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி இன்று நேரில் சந்தித்து அதிகாரிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், அதிகாரிகளின் செயல் வருத்தத்திற்குரியது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசு தின விழாவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.

ஆனால் அதன்பின் ஏற்பட்ட குழப்பத்தின்போது தேவையற்ற கருத்துகள் பேசப்பட்டுள்ளன. இது வருத்தத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை அறிவோம். நாட்டில் உள்ள எல்லா பகுதிகளிலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக நாங்கள் மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம். மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி தலைமையிலான சென்னை ரிசர்வ் வங்கி அலுவலக பிரதிநிதிகள் தமிழக நிதியமைச்சர் பி.தியாகராஜனை சந்தித்து இவ்விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

Related Stories: