குளச்சலில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத உடும்பு சுறா: 5 மணிநேரம் போராடி கரை சேர்த்தனர்

குளச்சல்: குளச்சல் மரமடியை சேர்ந்தவர் மெல்பின்(40).இவர் சொந்தமாக பைபர் படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.நேற்று இவர் வழக்கம்போல் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து படகில் மீன் பிடிக்க சென்றார். உடன் 2 மீனவர்களும் சென்றனர். அவர்கள் கடலில் வலையை வீசிய சிறிது நேரத்தில் ராட்சத மீன் ஒன்று படகு மீது மோதியது. இதில் படகு குலுங்கியது. மறுகணம் படகில் மோதிய ராட்சத மீன் தானாகவே மீனவர் வலையில் சிக்கி கொண்டது. உடனே மீனவர்கள் வலையை இழுத்து படகை கரை நோக்கி செலுத்தினர். மீன் வலை மிகவும்  கனமாக இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கரையை நோக்கி வரும்போது வலை அறுந்தது. அப்போதுதான் வலையில் சிக்கியது ராட்சத உடும்பு சுறா என  மீனவர்களுக்கு தெரிந்தது. மீனை தப்பவிட்டால் படகை கவிழ்த்து விடும். செய்வதறியாது தவித்த மீனவர்கள் கயிற்றால் கட்டி சுமார் 5 மணிநேரம் போராடி குளச்சல் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் விசைப்படகின் கப்பி மூலம் மீனை கரை சேர்த்தனர். அது 12 அடி நீளமும், 1500 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. கரை சேர்க்கப்பட்ட உடும்பு சுறாவை பொதுமக்கள் வேடிக்கையுடன் கண்டு களித்தனர்.

சிறுவர்கள் அதன் மீது ஏறி உட்கார்ந்து சவாரி செல்வது போல் விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் மீன் ஏலமிடப்பட்டது. அது ₹.40 ஆயிரம் விலை போனது. ஆனால் சுறாவை பிடித்த வலை முற்றிலும்  சேதமானது. அவருக்கு ₹.1லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர்.

Related Stories: