முதுமலை தெப்பக்காடு முகாமில் யானைகள் அணிவகுப்புடன் குடியரசு தின கொண்டாட்டம்

கூடலூர்: குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமிலும் குடியரசு தின கொண்டாட்டம் நடந்தது. யானைகள் அணிவகுப்பு மரியாதையுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது சிறப்பானதாக அமைந்தது. வனச்சரகர் மனோகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது அணிவகுப்பில் நின்றிருந்த யானைகள் பிளீறல் சத்தமிட்டு தேசியக்கொடிக்கு தங்களது வணக்கத்தை தெரிவித்தன. நிகழ்ச்சியை முதுமலைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலரும் கண்டு ரசித்தனர். யானைகளின் அணிவகுப்பும், தேசிய கொடிக்கு யானைகள் செய்த வணக்கமும் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. தொடர்ந்து வனத்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. வனச்சரகர்கள் விஜய், மனோஜ் உள்ளிட்ட வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: