69 ஆண்டுகளுக்குப் பின் கைமாறியது ஏர் இந்தியா நிறுவனம்!: முறைப்படி டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை முறைப்படி டாடா குழுமத்திடம் ஒன்றிய அரசு ஒப்படைத்தது. ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடும் நிதி நெருக்கடி காரணமாக ஏலத்தில் ஒன்றிய அரசு விற்றபோது கடந்த அக்டோபர் 8ம் தேதி ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமம் அதனை வாங்கியது. இதில் 2,700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாகவும், மீதமுள்ள ரூ.15,300 கோடியை ஏர் இந்தியா கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. ஏர் இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் நிறுவனமாக செயல்பட்டு வந்த நிலையில், அது தற்போது 69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியை டாடா குழும தலைவர் சந்திரசேகரன் சந்தித்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்படைக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைப்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்கும் நடைமுறை முடிவடைந்ததாக ஒன்றிய அரசின் முதலீட்டு துறை செயலர் அறிவித்தார். டாடா குழுமத்தை சேர்ந்த டலைஸ் பிரைவேட் நிறுவனத்துக்கு ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளும் மாற்றம் செய்யப்பட்டதாகவும் துஹின்காந்த் தெரிவித்துள்ளார்.

இனி ஏர் இந்தியா நிறுவன உரிமையாளர் டலைஸ் பிரைவேட் லிமிடெட் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனம் வந்த நிலையில் புதிய இயக்குநர்கள் பொறுப்பேற்றனர். டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் 69 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அந்த நிறுவனத்திடமே சேர்ந்தது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மூன்றாவது விமான நிறுவனம் ஏர் இந்தியாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: