தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு விருப்ப ஓய்வு கோரி கடிதம்

டெல்லி: டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வுப்பெற ஒரு ஆண்டு 3 மாதங்கள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜக்மோகன் சிங் ராஜு பஞ்சாப் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் விருப்ப ஓய்வு கோரி கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் உள்ள தமிழக அரசின் பணிகள் அனைத்தையும் ஜக்மோகன் சிங் ராஜு முன்னின்று கவனித்து வந்தார். டெல்லியில் உள்ள 2 தமிழ்நாடு இல்லங்களை நிர்வகிப்பது, தமிழக அரசு ஒன்றிய அரசுடன் தொடர்பு கொண்டு ஒன்றிய அரசின் திட்டங்கள் தொடர்பான பணிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகள் அனைத்திலும் இவர் முக்கிய பங்கு வகித்து வந்தார். இவர் முதன்மை செயலாளருக்கு இணையாக கூடுதல் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் விருப்ப ஓய்வு வேண்டும் என்று விண்ணப்பித்திருந்து அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜக்மோகன் சிங் ராஜு தமிழக அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

தமிழக அரசு அந்த பணிக்கு வேறொரு புதிய அதிகாரியை நியமிப்பதற்கு, ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பை கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பணிகள் தொடர்பான ஒன்றிய அரசுடன் நடைபெறும் அனைத்து கருத்து பரிமாற்றங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தவர் ஜக்மோகன் சிங் ராஜு. எனவே அவர் தற்போது அவரது பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Related Stories: