×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரணத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26.1.2022 அன்று அறிவித்துள்ளது.

அதன்படி வேட்புமனுக்கள் 28.1.2022 அன்று காலை 10.00 மணி முதல் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் தங்களது வேட்புமனுவை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 29.1.2022 சனிக்கிழமை பணி நாள் என்பதால், அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் 19.1.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை ஏற்று வாக்குப்பதிவு நேரத்தினை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிடவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவினை நடத்திடவும் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் மேற்படி ஆணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்கள் மட்டும் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : State Election Commission , Candidates can also file nominations to contest in the local body elections on Saturday: State Election Commission announcement.!
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு