×

கடைகளில் விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி!: நிபந்தனையுடன் அனுமதி அளித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு சந்தை விற்பனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, அடுத்த சில மாதங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டது. தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகிறது. 60 வயது மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், முன்கள பணியாளர்களுக்கு அடுத்தகட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெரும்பாலானோருக்கு போடப்படுகிறது.

இந்த 2 தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது. கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.1,200க்கும், கோவிஷீல்டு ஒரு டோஸ் ரூ.750க்கு விற்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.150 சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இந்த விலை அதிகமாக இருப்பதாகவும், இதனை குறைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனிடையே கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு ஒன்றிய அரசிடம் அதன் உற்பத்தி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. மருந்து குறித்த பரிசோதனை தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றை ஆராய்ந்த வல்லுநர் குழு, இரண்டு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது.

அதனையடுத்து, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வந்தோருக்கு மட்டும் தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நிறுவனங்களும், தற்போது நடந்துகொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவை சமர்ப்பிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்கவிளைவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Cow Shield ,Kovacs ,United Kingdom , Shop, Covishield, Covaxin, Vaccine
× RELATED பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட...