கைமாறும் ஏர் இந்தியா!: பிரதமர் நரேந்திர மோடியுடன் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் சந்தித்து ஆலோசனை..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சற்று நேரத்தில் முறைப்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பு டாடாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பானது நிகழ்கிறது. நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் ஒன்றிய அரசு விற்றபோது 18 ஆயிரம் கோடி ரூபாய் விலைக்கு டாடா குழுமம் அதனை வாங்கியது. இதில் 2700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாகவும், மீதமுள்ள தொகை ஏர் இந்தியா தனது கடனை தீர்க்க பயன்படுத்த உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் நிறுவனமாக செயல்பட்டு வந்த நிலையில், அது தற்போது 69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்படவிருக்கிறது.

இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தது. இத்தகைய சூழலில் இன்று டாடா குழுமத்தில் இயக்குனர்களாக உள்ள ஒன்றிய அரசு பிரதிநிதிகள் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர்களுக்கு பதிலாக டாடா குழுமத்தின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். அடுத்தபடியாக டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை தனது பொறுப்பில் ஏற்று அதற்கு புதிய தலைமை அதிகாரி மற்றும் முக்கிய அதிகாரிகளை நியமிக்க இருக்கிறது. டாடா குழுமம் ஏர் இந்தியா மூலம் இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: