உத்தரபிரதேச சட்டப் பேரவையில் யோகி தான் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சரியானவர்! விவசாய சங்கத் தலைவர் கிண்டல்

பிஜ்னூர்: உத்தரபிரதேச சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக யோகியை பார்க்க விரும்புகிறேன் என்று விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகைத் கூறினார். கடந்த ஓராண்டாக நடந்த விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய இந்திய தேசிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல தருணங்களில் கண்டனங்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவர் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னூர் கிராம விவசாயிகளிடம் பேசுகையில், ‘ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க சுதந்திரம் உண்டு. அமைதியான சூழலில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நபரும் அவரவர் விருப்பப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

பாஜகவுக்கு எதிராக வாக்களித்து தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக எதிர்கட்சித் தலைவர் வலுவானவராக இருக்க வேண்டும். அந்த வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை நான் எதிர்கட்சி தலைவராக பார்க்க விரும்புகிறேன். அந்த பதவிக்கு யோகியை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை என்று நான் கருதுகிறேன்’ என்று கேலியாக கூறினார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகைத், ‘எதிர்வரும் 5 மாநில தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் நாங்கள் வெளிப்படையாக ஆதரவளிக்க மாட்டோம்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: