தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்ற புகார் போலி என்பது அம்பலம்

தஞ்சை: தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவி மரணத்துக்கு தனியார் பள்ளியின் மதமாற்ற முயற்சியே காரணம் என்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் புகார் கூறின. மதமாற்றம் நடந்ததா என்ற கேள்விக்கு மாணவி ஆமாம் என்று சொல்வதுபோல எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியானது. பாஜக வெளியிட்ட அந்த வீடியோவில் மாணவியிடம் என்ன கேட்கப்பட்டது என்பது முழுமையாக வெளியிடப்படாததால் சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் புதிய வீடியோ வெளியாகி பாஜக புகாரை பொய் என்று நிரூபித்துள்ளது. மாணவியிடம் கேள்வி கேட்டு வீடியோ எடுத்தவர், இந்து அமைப்பை சேர்ந்த முத்துவேல் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளராக உள்ள முத்துவேல், மாணவியின் வாக்குமூலத்தை 4 வீடியோக்களாக பதிவு செய்துள்ளார். 3 வீடியோக்களில் மாணவி லாவண்யா மதமாற்ற புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. மதமாற்ற புகாரை கூறும்படி சொல்லிக்கொடுத்து 4வது வீடியோ பதிவு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்துகின்றனர்.

நீதிபதி முன் கொடுத்த மரண வாக்குமூலத்திலும் மதமாற்ற புகார் குறித்து மாணவி எதுவும் கூறவில்லை. மாணவி மரணம் தொடர்பாக பெற்றோர் அளித்த முதல் புகாரிலும் மதமாற்றம் குறித்து எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என தஞ்சை எஸ்.பி தகவல் அளித்துள்ளார். மாணவி பேசுவதை வீடியோ எடுத்த முத்துவேல், 2019ல் பாஜக ஒன்றிய தலைவராக இருந்தபோது மத போதகரை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர். மாணவி பேசுவதை வீடியோவாக பதிவு செய்த முத்துவேலிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். மாணவியின் மரணத்துக்கு முன்பே எடுக்கப்பட்ட வீடியோவை போலீசிடம் உடனடியாக தராததில் உள்நோக்கம் உள்ளதா என்றும் விசாரணை நடத்துகின்றனர். மாணவி மரணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பே வீடியோ எடுத்த போதும் அதனை வெளியிடாமல் தாமதித்தது ஏன் என்றும் விசாரணை நடத்துகின்றனர்.

தற்கொலை செய்த மாணவி தனது சித்தி கொடுமைப்படுத்துவதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் ஏற்கனவே புகார் கூறியுள்ளார். மாணவிக்கு சித்தி கொடுமை நடந்ததா என்று விசாரணை நடைபெற்று வரும் நிலையிலேயே தற்கொலை நிகழ்ந்துள்ளதால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது. மாணவியின் புதிய வீடியோ வெளியானதை அடுத்து போலி புகார் கூறிய பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: