தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்; இலங்கைக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பல்வேறு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட விசைப் படகுகளை தமிழக மீனவர்களுக்குத் திருப்பித் தராமல் தன்வசம் வைத்திருந்த இலங்கை அரசு, அந்தப் படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடப்போவதாக விளம்பரப்படுத்தியிருப்பது இந்திய மீனவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.  மொத்தம் 105 படகுகள் ஏலத்திற்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல், கொரோனா தொற்று நோய் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு இலங்கை அரசின் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. படகுகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தது.

ஒன்றிய அரசும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போல உள்ளது. இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அரசின் செயலை ஒன்றிய அரசு தடுக்காவிட்டால் பிப்ரவரி 2ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர், பிரதமருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளார் என்றாலும், ஏலத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் கூட இல்லாத நிலையில் ஒன்றிய அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தேவையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். படகுகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: