செம்பட்டி அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த வீரக்கற்கள் கண்டுபிடிப்பு

சின்னாளப்பட்டி: செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த 3 வீரக்கற்கள் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த நடராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நாயக்கர் காலத்தை சார்ந்த 3 வீரக்கற்கள் இருப்பதை நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, பேராசிரியர் மாணிக்கராஜ் ஆகியோர் இப்பகுதியில் மேற்கொண்ட களஆய்வில் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:இந்த ஊர் பிற்கால பாண்டியர் காலமான கி.பி 13ம் நூற்றாண்டில் ஆற்றூர் நாட்டு பிரிவின் கீழ் இருந்துள்ளது. நாயக்க மன்னர்கள் காலத்தில், ராமநாதபுரம் சேதுபதிகள் நாயக்க மன்னர்களுக்கு படைகளை கொடுத்து உதவியுள்ளனர். அவர்கள் அனுப்பிய படைகள் இவ்வூரில் முகாமிட்டு இருந்ததால் இந்த ஊருக்கு பாறைப்பட்டி என்ற பெயர் உருவானது என்ற தகவலும் உள்ளது. திண்டுக்கல் அருகேயுள்ள பெரிய பாறையை ஒட்டி உருவானதால் பாறைப்பட்டி என்ற பெயர் வந்ததாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் கி.பி 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் 3 வீரக்கற்கள் உள்ளன. வீரக்கல் என்பது வீரம் காட்டி சண்டையிட்டு மடியும் வீரர்களின் நினைவாக வைக்கபடுவதாகும். இங்குள்ள 3 வீரக்கல்லில் நடுவில் உள்ள கல்லில் மட்டும் 3 வீரர்களின் சிற்பம் உள்ளது. இதில் நடுவில் உள்ள வீரன் மற்ற இரு வீரர்களை விட உயரமான உருவமாக காட்டப்பட்டுள்ளார். மற்ற இரு கற்களில் 4 வீரர்களின் உருவங்கள் புடைப்பு சிற்பங்களாகவும், ஆயுதங்களை ஏந்திய நிலையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 7 வீரர்களும் நாயக்க மன்னர்களுக்கு போர்க்காலங்களில் உதவியாக சண்டையிடும் போது வீரமரணம் அடைந்திருக்கலாம். இப்பகுதியில் அதிகளவில் இரும்பு கழிவுகள் காணப்படுகிறது. இங்கு முகாமிடும் படைவீரர்களின் ஆயுதங்களை கூர்மையாக்க, உருக்க இரும்பு பட்டறைகள் இருந்திருக்கலாம்.இவ்வாறு கூறினர்.

Related Stories: