பள்ளிக்கு செல்ல தயாரா ?..பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து 1- 12ம் வகுப்பு பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு!

சென்னை : தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை  முடிவெடுத்தது. அதன்படி ஜனவரி 5ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன.

 எனினும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், பொதுத் தேர்வு உள்ள வகுப்புகள் என்பதாலும் செப்டம்பர் மாதம் முதல் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று தீவிரம் அடையத் தொடங்கியதால், மாணவர்களின் நலன் கருதி 19ம் தேதி முதல் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளித்தது தமிழக அரசு. அத்துடன் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த  திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை 4 நாட்களிக் (ஜனவரி 31 ) முடிவடையவுள்ள நிலையில்,  இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் அறிக்கை படியும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதியும்,  வீடுகளில் முடங்கியிருக்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: