சென்னையில் நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியதை தட்டி கேட்டதால் தாக்குதல்: மூவர் கைது; மற்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை: சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்த யுவராஜ் கடந்த 25 ஆம் தேதி இரவு, தனது பிறந்தநாளை 10- க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சேர்ந்து பொண்ணுவேல்புரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு எதிரே கொண்டாடியுள்ளார். இதில் சாலையின் நடுவில் காரை நிறுத்தி கேக் வெட்டியதாகவும், மது பாட்டில்களுடன் நின்றுகொண்டு மது போதையில் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பகுதி பெண்கள் சிலர் அந்த நபர்களை கண்டித்துள்ளனர். அதில் மலர்க்கொடி என்ற பெண்ணை அந்த நபர்கள் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.

மலர்க்கொடியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது கணவர் சிவகுமார் மற்றும் மகன் அதனை தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த அவர்கள்  சிவகுமார் மற்றும் அவரது மகனை மதுபாட்டில்களைக் கொண்டு தலையில் தாக்கிவிட்டு அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் தள்ளி இடித்துள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஒன்று திரண்டதால் தகராறில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அதில் பிறந்தநாள் கொண்டாடிய யுவராஜ், அஜித்ராஜா மற்றும் அப்பு ஆகிய 3 பேரையும் அப்பகுதியினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

மற்றவர்கள் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவத்தின் போது படுகாயமடைந்த சிவகுமாருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களை தாக்கிவிட்டு தப்பியோடிய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: