ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற காட்டுயானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே காட்டுயானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நடமாடுவது வழக்கம்.  நேற்று காலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே 2 காட்டு யானைகள் வனப்பகுதியைவிட்டு வெளியேறி சாலையோரம் சுற்றி திரிந்தன.

காட்டு யானைகள் சாலையோரம் நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கினர். திடீரென 2 காட்டு யானைகளும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து   வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் பகல் நேரத்தில் திடீரென சாலையை கடந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தற்போது வனப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பனிப்பொழிவு காரணமாக மரம், செடி கொடிகள் காய்ந்து போக தொடங்கியுள்ளது. இனி வரும் மாதங்களில் மழை பெய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதால் காட்டு யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது அதிகரிக்கும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: