மதுரை ரயில்வே கோட்டத்தில் ₹510.35 கோடி வருமானம்: குடியரசு தினவிழாவில் மேலாளர் தகவல்

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் ரூ.510.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.மதுரை ரயில்நிலையத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், ராணுவ உடை அணிந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கோட்ட மேலாளர் பிராந்திய ராணுவ பிரிவில் உயர்நிலை அதிகாரியாக இருப்பதால் ராணுவ உடையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த நிதியாண்டில் கடந்த டிசம்பர் வரை மதுரை கோட்டம் ரூ.510.35 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 97 சதவீதம் அதிகம். பயணிகள் ரயில்கள் மூலம் ரூ.280.80 கோடியும், சரக்கு ரயில்கள் மூலம் ரூ.191.44 கோடியும், இதர வருமானமாக ரூ.38.11 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரை 1.7558 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

இவற்றில் அதிகபட்சமாக 63 சதவீத அளவில் சுமார் 0.5273 மில்லியன் டன் நிலக்கரி கையாளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மணிக்கு 44.2 கி.மீ., வேகத்தில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது சராசரியாக மணிக்கு 49.62 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.மதுரை கோட்டத்தில் முதல்முறையாக சமையல் எண்ணெய் போக்குவரத்திற்காக பழநி அருகே உள்ள புஷ்பத்தூர் ரயில் நிலையத்தில் திரவ சரக்கு கையாளும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. அரசு, தனியார் பங்கேற்பின் மூலம் பழநி ரயில்வே சரக்கு நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா மின்கல ஊர்தி சேவை மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 27 ரயில்நிலையங்களில் ரூ.40 கோடி செலவில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஜனவரி இறுதியில் மானாமதுரை - ராமநாதபுரம் ரயில்வே பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கல் ஏற்பாடுகளை பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்கிறார். திருச்சி - காரைக்குடி, பழநி - பொள்ளாச்சி, கொல்லம் - புனலூர், மானாமதுரை - விருதுநகர் ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் வரும் மார்ச் இறுதியில் நிறைவடையலாம். திண்டுக்கல் - பழநி, செங்கோட்டை - புனலூர், செங்கோட்டை - திருநெல்வேலி - திருச்செந்தூர், மற்றும் விருதுநகர் - தென்காசி ரயில் பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் 2022-23ம் நிதியாண்டில் நிறைவடைகின்றன. இதேகாலத்தில் மதுரை - திருமங்கலம், துலுக்கபட்டி - கோவில்பட்டி ரயில் பிரிவுகளில் நடைபெற்றுவரும் இரட்டை ரயில் பாதை பணிகளும் நிறைவுபெறும்.இவ்வாறு தெரிவித்துள்ளார். விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தமிழ் ரமேஷ்பாபு, உதவி பாதுகாப்பு ஆணையர் சுபாஷ், உதவி ஊழியர்கள் அதிகாரி ராமகிருஷ்ணன் உட்பட உயர் ரயில்வே அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: