பல லட்ச போலி கணக்குகளை நீக்குவதால் பின்தொடர்வோரின் எண்ணிக்கை குறையும் : ராகுல் காந்திக்கு ட்விட்டர் நிறுவனம் விளக்கம்!!

டெல்லி : தனது ட்விட்டர் கணக்ககில் தன்னை பின் தொடரும் பல ஆயிரக்கணக்கானோர் கணக்குகளை மோடி தலைமையிலான அரசு நீக்கி இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ள குற்றச்சாட்டை ட்விட்டர் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை 1.90 கோடி பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் ட்விட்டர் கணக்கில் தன்னை பின் தொடர்வோரின் எண்ணிக்கையை மோடி அரசு சுருக்கிவிட்டதாக கூறி ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் கடந்த ஆண்டு முதல் 7 மாதங்களில் தாம் சராசரியாக 4 லட்சம் பேரை இணைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் அதன் பின்னர் அந்த எண்ணிக்கை மாதம் தோறும் வெகுவாக குறைந்து வருவதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைத்தளங்களை டெல்லி எப்படி கட்டுப்படுத்துகிறது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார். இந்திய கொள்கையை அழிக்கும் நடவடிக்கையில் ட்விட்டரை அடகு வைத்துவிட வேண்டாம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், ஒவ்வொரு வாரமும் பல லட்சம் போலி கணக்குகளை நீக்கி வருவதாக கூறியுள்ளது. இதனால் சிலரது கணக்குகளில் இது போன்ற எண்ணிக்கை குறைவு ஏற்படுவது இயல்பு தான் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: