ஆம்பூர் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த விவசாயி: தேடும் பணி தீவிரம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விவசாயி தவறி விழுந்தார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(42), விவசாயி. இவரது விவசாய நிலம் அங்குள்ள மலையடிவாரம் அருகே உள்ளது. நேற்று காலை 6 மணியளவில் ராஜேஷ் தனது நிலத்திற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் ராஜேஷை தேடி கொண்டு விவசாய  நிலத்திற்கு வந்தனர். அங்கு அவர் இல்லாத நிலையில், அருகே உள்ள கிணற்றில் எட்டி பார்த்துள்ளனர்.

அப்போது, சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ராஜேஷின் செருப்புகள் மிதந்து கொண்டிருந்தன. எனவே, அவர் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகித்த குடும்பத்தினர் உடனடியாக ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மேகநாதன் தலைமையிலான மீட்பு படை வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கிணற்றில் தண்ணீர் அதிகளவில் இருந்ததால் 3 மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீரை வெளியேற்றி தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை தொடர்ந்து தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.மேலும், இரவாகி விட்டதால் போதிய வெளிச்சம் அங்கு இல்லை. எனவே, மீட்பு பணிகளை கைவிட்டனர். இன்று மீண்டும் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: