மதுரையில் குடியரசு தினத்தன்று விடுமுறை வழங்காத 168 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிப்பு..!!

மதுரை: மதுரையில் குடியரசு தினவிழாவில் விடுமுறை வழங்காத 168 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு அபராதமும் விதிக்கப்பட்டது. 73வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசு விழாவான அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு தொழிலாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில், அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அதன் விவரத்தை விடுமுறை தினத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை வழங்கப்படாத தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மதுரையில், பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என புகார் வந்ததை தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழில் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 168 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, மதுரையில் விதிகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 82 கடைகள், 81 உணவகங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: