×

பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்துக்கொலை: உடல் முந்திரித்தோப்பில் வீச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அருகேயுள்ள கீழக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரின் மகன் அஸ்வின். இந்த சிறுவனுக்கு தற்போது 4 வயதாகிறது. இந்த 4 வயது சிறுவன் நேற்று பிற்பகல் 3 மணிக்கு வீட்டைவிட்டு விளையாட சென்ற சிறுவனை காணவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். பல இடங்களில் தேடிய நிலையில் இந்த சிறுவன் கிடைக்காததால் நேற்று இரவு முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் இடங்களில் தேடினர். இந்நிலையில் அந்த கிராமத்தில் விசாரிக்கும் போது பக்கத்து வீட்டு இளம்பெண் அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு சென்றதாக தகவல் தெரிய வருகிறது. அந்த இளம்பெண்ணையும் காணாத நிலையில் தொடர்ந்து அந்த சிறுவனை தேடி வந்தனர். விடிய விடிய கிராம மக்கள் பல்வேறு பகுதிகளில் தேடிய நிலையில் அந்த சிறுவன் கிடைக்கவில்லை.

இன்று காலை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கும்பகோணம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவனை தேடி வருவதாக தெரிவித்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சிறுவனின் உடல் அந்த கிராமத்தின் அருகேயுள்ள முந்திரி தோப்பில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் முழுவதும் காயங்களுடன் அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த சிறுவன் எதற்காக கொலை செய்யப்பட்டான் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிறுவனை அழைத்து சென்ற இளம்பெண் எங்கே என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அந்த இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அந்த கிராம மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர். அந்த இளம்பெண்ணை கண்டுபிடித்த பிறகு தான் கொலைக்கான காரணம் தெரியவரும். 4 வயது சிறுவன் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு முந்திரி காட்டில் வீசப்பட்டுள்ள சம்பவம் பண்ருட்டி பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளதால் இந்த கீழக்கொள்ளை மற்றும் பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் சிறுவனின் உடல் தற்போது அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Tags : Panruti , Boy, murder
× RELATED சீனாவின் ஹினான் மாகாணத்தில் 4 வயது...