பழங்குடி மக்களுடன் குடியரசு தினவிழா: எம்எல்ஏ எஸ்.சந்திரன் பங்கேற்பு

திருத்தணி: பழங்குடி இன மக்களுடன் குடியரசு தினவிழாவை, திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கொண்டாடினார். திருத்தணி முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் குடியரசு தினம் ேநற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் குடிசைகளில் வாழும் மலைவாழ் மக்களை ஊக்குவிக்கும் வகையில், குடியரசு தினவிழா கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படி திருத்தணி அடுத்த தாடூர் ஊராட்சி பகத்சிங் நகரில் வசிக்கும் பழங்குடியின  மக்கள் வாழும் பகுதியில் நேற்று குடியரசு தினவிழாவை கொண்டாடினார்.

கடந்த சில ஆண்டுகளாக, பகத்சிங் நகரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, இலவச குடியிருப்பு மனை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர். இதைதொடர்ந்து, குடியரசு தினவிழாவை, அங்கு வாழும் மக்களோடு கொண்டாட வேண்டும் என கருதி, நேற்று அப்பகுதியில் தேசிய கொடியேற்றி, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அப்பகுதிக்கு விரைவில் சிமென்ட் சாலை அமைத்து தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தார்.

தொடர்ந்து அங்குள்ள மக்களோடு சாதாரண ஓலைக் குடிசையில், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டு, அவர்களை மகிழ்ச்சிய செய்தார். தொடர்ந்து இதுபோன்ற ஏழைகளுக்கு தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றுகிறார். முதல்வர் வழியில் எங்களது பணி தொடரும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எந்த நேரமும் நீங்கள் என்னை அழைத்தால், உங்களுக்கு கடமையாற்ற தயாராக உள்ளேன் என்றார். நிகழ்ச்சியில்  மலைவாழ் மக்கள் சங்க விவசாய குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட விவசாய சங்க துணைத் தலைவர் அப்சல்அகமது, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, என்.கிருஷ்ணன், நக்சல் தடுப்பு பிரிவு காவலர் சுரேஷ், வார்டு உறுப்பினர் சேகர், திமுக பொறுப்பு உறுப்பினர் டில்லிபாபு, வாலிபர் சங்கம் பாலாஜி, பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் வேலு நன்றி கூறினார்.

Related Stories: