×

ஆவடி மாநகராட்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறை: காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பற்றாக்குறையை தீர்க்க, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், அண்ணனூர், கோவில்பதாகை, மிட்டனமல்லி, முத்தாப்புதுபேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை கவனிக்க பொறியாளர் துறை, சுகாதாரத் துறை வருவாய்த் துறை, நகரமைப்புத் துறை அலுவலகத் துறை ஆகியவை உள்ளன. மேற்கண்ட துறைகள் மூலம் சாலை, குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்து தரப்படுகின்றன.

கடந்த 2019 ஜூன் மாதம் ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகும், அதிமுக ஆட்சியில் மாநகராட்சிக்கு கூடுதலாக அதிகாரிகள், ஊழியர்கள் நியமனம் செய்வில்லை. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. மேலும், நகராட்சியாக இருந்தபோது பணியாற்றி அதிகாரிகள், ஊழியர்கள் பணி இடங்களும் காலியாக இருந்தன. இதனை நிரப்ப உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது, மாநகராட்சியில் ஒரு உதவி பொறியாளர், ஒரு நகரமைப்பு ஆய்வாளர், ஒரு சுகாதார அலுவலர், 80க்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
 இதனால், மக்கள் நலப் பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதையொட்டி, பல்வேறு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும், கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யவில்லை. இதுமட்டுமின்றி, தற்போது பல துறையில் அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து துறைகளிலும் காலியிடங்களை உடனடியாக  நிரப்ப மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : Avadi Corporation , Lack of officers and staff in Avadi Corporation: Urging to fill vacancies
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்