ஈவு இரக்கமற்ற நடவடிக்கையால் கொரோனா ஏஎப்சி மீது பயிற்சியாளர் கடும் குற்றச்சாட்டு: ஆடாமல் வெளியேறிய இந்திய மகளிர்

மும்பை: ‘ஆசிய கால்பந்து கூட்டமைப்பின்(ஏஎப்சி) ஈவு ஈரக்கமற்ற  நடவடிக்கைகளால்  இந்திய மகளிர் கால்பந்து அணி கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி போட்டியில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டது’ என்று பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜன.20ம் தேதி  மும்பையில் தொடங்கியது.  அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு(ஏஐஎப்எப்) உடன் இணைந்து இந்தப் போட்டியை  ஆசிய கால்பந்து கூட்டமைப்பு(ஏஎப்சி)  நடத்துகிறது.

இந்தப் போட்டியில்   எப்படியாவது முதல் 4 இடங்களுக்குள்  வந்து, உலக கோப்பை போட்டிக்கு தகுதிப் பெற வேண்டும் என்ற பெரிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முதல் போட்டியில் ஈரானுடன் கோலின்றி டிரா செய்தது. ஆனாலும் ஆட்டத்திறன் காரணமாக ஏ பிரிவில் புள்ளிப் பட்டியலில் ஈரானை பின்னுக்கு தள்ளியது. அடுத்து சீன தைபே, சீனா அணியுடன் விளையாட வேண்டி இருந்தது. ஆனால் அதற்குள் இந்திய வீராங்கனைகள் ஒவ்வொருவராக கொரோனா தொற்றுக்கு ஆளாக சீன தைபேவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது. தொடர்நது இந்தியா போட்டியில்  இருந்தும் வெளியேற்றப்பட்டது.

அதனால் வீராங்கனைகள்  மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி நேற்று, ‘ உலக கோப்பைக்கு தகுதிப் பெற  வேண்டும் என்ற எங்கள் இலக்கு,  நாங்கள் எந்த தவறும் செய்யமலேயே சிதைந்துப் போய் விட்டது. கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான ‘பயோ பபுள்’ எனப்படும் உயிர் பாதுகாப்பு குமிழியை ஏஎப்சி தரமாக பராமரிக்கவில்லை. ஏஎப்சியின் பலவீனமான பராமரிப்பு காரணமாக நாங்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆசிய அளவிலான பெரிய போட்டியில், இதுப்போன்ற அசாதரண சூழலை சமாளிக்க வேண்டிய வசதியை ஏஎப்சி செய்யவில்லை.  இந்த பிரச்னையில் இருந்து நாங்கள் மீள எங்களுக்கு ஏஎப்சி  மரியாதை, ஈவு, இரக்கம் எதையும் காட்டவில்லை.

போட்டிக்காக ஓட்டலுக்கு சென்ற போது யாருக்கும் தொற்று இல்லை. பயிற்சிக்காக வெளியே சென்று வந்த முதல் நாளே ஒரு வீராங்கனைக்கு தொற்று உறுதியானது. அந்த ஓட்டலில் அடுத்தடுத்து தலா 7 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டன. ஆனால் முடிவு தெரிந்தும், ஒருநாள் கழித்துதான் எங்களுக்கு தகவல் சொன்னார்கள்.  அதற்குள் எங்கள் வீராங்கனைகள் பலர் பாதிக்கப்பட்டனர். அணியினருக்கு ஒவ்வொரு 3 நாட்களுக்கு சோதனை செய்தது போல், ஓட்டல் ஊழியர்களுக்கு செய்யவில்லை. அவர்களுக்கு 6 நாட்களுக்கு ஒருமுறைதான் சோதனை செய்யப்பட்டதின் காரணம் புரியவில்லை’ என்று  கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

* ஏஐஎப்எப் செய்தது என்ன

உள்ளூரில் நடக்கும் போட்டிக்கு மாற்று  அணியை  இந்திய கால்பந்து கூட்டமைப்பால்(ஏஐஎப்எப்) தயார் செய்ய முடியததால்தான் இந்தியா அணி போட்டியில் இருந்து வெளியேறியது. ஆனால் அதை பயிற்சியாளர் தாமஸ் சுட்டிக் காட்டவில்லை. அதற்கு முன்னதாகவே ஏஐஎப்எப் நிர்வாகிகள், ‘போட்டியை விட வீராங்கனைகள் உடல்நலம்தான் முக்கியம்’ என்று  சமாளித்து வருகின்றனர்.

Related Stories: