சீன பகுதியில் நிலவும் மோசமான வானிலையால் மாயமான சிறுவனை விடுவிப்பதில் தாமதம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலம் அப்பர் சியாங் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் மிரம் தரோன்(17) கடந்த 18ம் தேதி மாயமானார். சீன எல்லையில் மாயமான சிறுவனை அந்தநாட்டு ராணுவம் கடத்தி சென்று காவலில் வைத்துள்ளதாக பாஜ எம்பி தபிர் கோவ் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சீன ராணுவத்தை தொடர்பு கொண்ட இந்திய ராணுவத்தினர் சிறுவனை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சிறுவனை மீட்டுவிட்டதாக சீன ராணுவம் தெரிவித்தது. இதற்கிடையில், ஒன்றிய அமைச்சர் கிரன் ரிஜிஜூ டிவிட்டர் பதிவில், ‘அருணாசல பிரசேத எல்லையில் மாயமான சிறுவனை மீட்டு தருமாறு சீன ராணுவத்திடம் இந்திய ராணுவ வீரர்கள் ‘ஹாட்லைன்’மூலம் தொடர்பு கொண்டு பேசினர். சீன ராணுவம் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக மிரம் தரோனின் படம் மற்றும் விவரங்கள் அளிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் விடுத்த கோரிக்கைக்கு சீன ராணுவம் அளித்த பதில்கள் திருப்திகரமாக உள்ளது. சிறுவனை விடுவிப்பதற்கான இடம், தேதி மற்றும் நேரம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் சீனா தெரிவித்துள்ளது. சீன பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தான் சிறுவனை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: