ஐஏஎஸ் விதிமுறைகளில் திருத்தம் 9 மாநிலங்கள் எதிர்ப்பு 8 மாநிலங்கள் ஆதரவு

புதுடெல்லி: ஒன்றிய அரசு பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றும் விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு ஏற்கனவே பாஜ அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் 9 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் 8 மாநிலங்கள் ஆதரவு  தெரிவித்துள்ளன. ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் கொண்டுவருவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஐஏஎஸ் அதிகாரிகளின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே ஒன்றிய அரசு பணிக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே,கேரளா முதல்வர் பினராயி விஜயன் ,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்,சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ,ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேற்குவங்க முதல்வர் மம்தா கூறுகையில்,‘‘திருத்தம் கொண்டுவருவதால் ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டு அவர்களுடைய செயல்பாடுகள் பாதிக்கப்படும். எனவே, பிரதமர் மோடி இந்த முடிவை கைவிட வேண்டும்’’ என வலியுறுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,‘ஒன்றிய அரசின் முடிவு ஒன்றிய கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநிலங்களின் சுயாட்சி போன்றவற்றின் அடிப்படைத்தன்மையையே சீர்குலைத்து விடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றும் விதிமுறைகளில் திருத்தம் செய்ய ஏற்கனவே 8 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஒடிசாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால், மாநில அரசின் நிர்வாகம், வளர்ச்சி பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

* நினைவூட்டல் கடிதம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கு அருணாச்சல பிரதேசம்,மணிப்பூர்,திரிபுரா,மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம்,குஜராத்,அரியானா,இமாச்சல பிரதேசம் போன்ற பாஜ ஆளும் 8 மாநிலங்கள் தங்களுடைய சம்மதத்தை தெரிவித்துள்ளன. கர்நாடகா,மேகாலயா மாநிலங்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இது பற்றி மறு ஆய்வு செய்து தங்களுடைய பதிலை அளிப்பதாக 2 மாநிலங்களும் தெரிவித்து உள்ளன. பீகாரும் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. இதில் பதில் அளிக்காத மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உடனே பதில் அளிக்கும்படி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்’ என்றனர்.

Related Stories: