×

இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை தொடருவதா, வேண்டாமா? அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கூட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 7ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் கடந்த 9, 16, 23 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. அரசு கொண்டுவந்த இந்த கட்டுப்பாடுகள் வருகிற 31ம் தேதி வரை அமலில் இருக்கும். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து ஒவ்வொரு வாரமும் முதல்வர் தனியாக அறிவித்து வருகிறார்.

இந்த கட்டுப்பாடுகளால் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. சென்னையில் தொற்று குறையத்தொடங்கி உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிய இன்னும் 4 நாட்களே இருப்பதால் அடுத்தகட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுகாதாரத்துறை நிபுணர்கள் பங்கேற்கிறார்கள். கொரோனா வேகம் குறைந்துள்ளதால் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டுமா, ஞாயிறு முழு ஊரடங்கை தொடர வேண்டுமா அல்லது கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அமல்படுத்தலாமா என்பது குறித்து விவாதிக்கிறார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Minister ,MK Stalin , Will the curfew continue throughout the night and Sunday, or not? Chief Minister MK Stalin today consulted with officials
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...