×

தமிழகத்தின் முன்னணி மருத்துவக்கல்லூரிகளில் சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக இடங்களை கைப்பற்றினர்

சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதில், நடப்பு ஆண்டில் மாநில பாடத்திட்ட மாணவர்களை விட  சி.பி.எஸ்.இ மாணவர்கள் அதிக இடங்களை பெற்றுள்ளனர். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 24ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ் தகுதிப் பட்டியலில் முதல் 1000  இடங்களில், சிபிஎஸ்இ மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்டத்தில் படித்த 394 பேர் மற்றும் ஐஎஸ்சிஇ போன்ற பிற பாடத்திட்டங்களில் படித்த 27 பேர் உள்ளனர்.

அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பெரும்பாலான இடங்கள் இந்த ஆண்டில் சிபிஎஸ்இ மாணவர்கள் வசம் செல்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7.5% இடங்கள் போக, சென்னை மருத்துவக் கல்லூரி 197  இடங்களையும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி 117 இடங்களையும், ஸ்டான்லி  மருத்துவ கல்லூரி 106 இடங்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் முன்னணி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சிபிஎஸ்இ மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இருப்பினும் விண்ணப்பதாரர்களில், மாநில பாடத்திட்ட மாணவர்கள் 64% ஆகவும், சிபிஎஸ்இ மாணவர்கள் 34% ஆகவும், மற்ற பாடத்திட்ட மாணவர்கள் 2% ஆகவும் உள்ளனர். சிபிஎஸ்இ மாணவர்கள் சிறப்பாகத் தயாராக உள்ளனர். மேலும் அவர்களின் தேர்வு முறை நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற ஊக்குவிக்கிறது. சிபிஎஸ்இ மாணவர்களுடன் ஒப்பிடும்போது மாநில வாரிய மாணவர்களுக்கு சரியான பயிற்சி கிடைக்கவில்லை. சமூகத்தின் வசதியான பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களால் மட்டுமே நீட் தேர்வில் சிறப்பாகச் செயல்பட முடிகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள்தான் தனியார் பயிற்சி மையங்களில் படித்து அதிக மதிப்பெண்களை பெற முடிகிறது.

மேலும் நடப்பு ஆண்டில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வில் முதல் தொகுதி இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க உள்ளது. இதோடு எய்ம்ஸ் மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள தமிழகம் முன்வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்ப்பதற்கான வசதிகள் உள்ளன. கல்லூரியில் மொத்தம் 150 இடங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு 100 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி உள்ளது. எனவே மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 50 மாணவர்களை இந்த வளாகத்தில்  சேர்க்கலாம் என ஒன்றிய அரசிடம் தெரிவித்துள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்’’ என அமைச்சர் கூறினார்.

Tags : CBSE ,Tamil Nadu , CBSE students have secured more seats in the leading medical colleges in Tamil Nadu
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...