மாற்றுத்திறனாளி மரணம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

சேலம்: சேலத்தில் மாற்றுத்திறனாளி சாவு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், புதியதாக வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கினர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காந்திபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த 16ம் தேதி, இவரது வீட்டில் 20 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கோட்டப்பட்டியை சேர்ந்த குமார் (35) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் (45), அவரது மனைவி ஹம்சலா(40) ஆகியோரை கடந்த 5ம் தேதி சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர். கடந்த 11ம் தேதி நாமக்கல் கிளைச் சிறையில் இருந்த பிரபாகரன் உடல்நிலை மோசமானதால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார். போலீசாரின் சித்ரவதையால் அவர் இறந்து விட்டதாக, உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, இவ்விவகாரத்தில் தொடர்புடைய போலீஸ் எஸ்ஐக்கள் சந்திரன், பூங்கொடி, ஏட்டு குழந்தைவேல் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இறந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவும் உத்தரவிட்டார். முதல்வர் உத்தரவுப்படி கடந்த வாரம் ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை பிரபாகரனின் மனைவியிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணையை தொடங்கி உள்ளனர். பிரபாகரன் இறந்தது தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதால், அதன் ஆவணங்களை போலீசார் சென்னை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆவணங்கள் சேலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக, சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக நாமக்கல் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பிரபா, சேலம் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், சாரதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய ஆவணமான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். வழக்கு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், அரசு மருத்துமனையில் பிரபாகரனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related Stories: