மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் செவிலியராக திருநங்கை நியமனம்

ராணிப்பேட்டை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் செவிலியராக பணியாற்ற திருநங்கைக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பணி நியமன ஆணையை வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, புளியங்கண்ணு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. திருநங்கையான இவர் பள்ளிப் படிப்பு முடித்து கடந்த 2016ம் ஆண்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிஎஸ்சி நர்சிங்கில் சேர்ந்து 2021ம் ஆண்டு படித்து முடித்தார். தொடர்ந்து, கொரோனா வார்டிலும் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வி கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம், தனக்கு செவிலியர் பணி வழங்கி உதவிட வேண்டும் என்று மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், தமிழ்ச்செல்வியின் விடா முயற்சி, நம்பிக்கையை பாராட்டினார். பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, புளியங்கண்ணு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் செவிலியராக பணியாற்றுவதற்கான ஆணையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தமிழ்ச்செல்வியிடம்  வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட தமிழ்ச்செல்வி சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு திருநங்கைகள் சேவை செய்திடவும், சமூகத்தில் அனைவருடனும் சமமாக பணியாற்றும் வாய்ப்பு அளித்த கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: