பெரம்பலூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது மேற்கூரையை துளைத்த வீட்டில் மேலும் ஒரு குண்டு கண்டெடுப்பு: திருச்சி தடயவியல் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நாரணமங்கலத்திலுள்ள போலீஸ் துப் பாக்கிசுடும் தளத்திலிருந்து ஈச்சங்காடு வீட்டில் ஆஸ் பஸ்டாஷ் கூரையை துளைத்த மற்றொரு  குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி தடயவியல் உதவி இயக்குனர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீஸ் சரகம், நாரணமங்கலத்தில் பச்சைமலையடிவாரத்தில், காவல்துறையின் துப்பாக்கி சுடும் தளம் உள்ளது. இங்கு  கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதிவரை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டனர்.

இதில் கடந்த 24ம் தேதி நடந்த  பயிற்சியின்போது யாரோ ஒரு வீரரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய புல்லட் மலையின் பின்புறம் சுமார் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு அப்பாலுள்ள ஈச்சங்காடு காட்டுக்கொட்டகை கிராமத்தில் வசிக்கும் சுப்ரமணியன் (60)  என்பவர் வீட்டின் சீட் கூரையில் விழுந்து துளை ஏற்பட்டது. இதுகுறித்து நாரணமங்கலம் விஏஓ நாராயணசாமி கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் புல்லட்டைக் கைப்பற்றி,  முதல்கட்ட விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று சுப்ரமணியன் குடும்பத்தினர் வீட்டை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்தபோது, 2 மாதத்திற்கு முன்பு ஆஸ்பெட்டாஷ் மேல் மழைநீர் கசிந்ததற்காக போடப்பட்ட கீற்றை அகற்றியபோது நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட குண்டைவிட சற்று சிறிய ரக மற்றொரு குண்டு கிடந்தது. 2 மாதத்திற்கு முன்பிருந்தே இந்த குண்டு கிடப்பதால் துருப்பிடித்து காணப்பட்டது. இந்த குண்டு துளைத்ததாக சிறிய துளையையும் அவ்வீட்டார் காண்பித்தனர். மேலும் திருச்சி ரயில்வே பாதுகாப்புப்படை மேற்கொண்ட பயிற்சி இல்லாமல், போலீசார் மேற்கொண்ட பயிற்சியின்போதும் இந்த புல்லட் வந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. இது பற்றித் தகவலறிந்து திருச்சி தடயவியல் உதவி இயக்குநர் ராஜேந்திரன் நேற்று சுப்ரமணியன் வீட்டிற்கு வந்து நேற்று கிடைத்த புல்லட்டை பார்வையிட்டு என்ன ரக குண்டு,  என்பது குறித்து விசாரணை நடத்திச் சென்றார்.

Related Stories: