இயற்கை உணவு, நடைபயிற்சியே ஆரோக்கியத்துக்கு காரணம் பிறந்த நாள் கொண்டாடினார் 103 வயது விருதுநகர் முதியவர்

விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள மீசலூரைச் சேர்ந்த முதியவர் சின்னராஜா தனது 103வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விருதுநகர் அருகே மீசலூர் அழகாபுரியை சேர்ந்தவர் சின்னராஜா (103). பஞ்சு வியாபாரம் செய்து வந்த இவருக்கு பாலாமணி, வசந்தகுமாரி, திலகவதி, மேனகா என 4 மகள்கள், அழகர்சாமி என்ற மகன் மற்றும் இரு பேத்திகள் உள்ளனர். மகன் அழகர்சாமியுடன் வசித்துவரும் சின்னராஜா, குடியரசு தினமான நேற்று தனது 103வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

கடந்த 1963ம் ஆண்டு கக்கன் அமைச்சராக இருந்த போது தமிழ்நாடு மார்க்கெட்டிங் சொசைட்டியின் மெம்பராகவும், விருதுநகர் சிவன் கோயிலில் அறங்காவல் குழு துணைத்தலைவராகவும் சின்னராஜா  இருந்துள்ளார். கொரோனா உள்பட கொடிய நோய்கள் பரவி வரும் தற்போதைய சூழலில், எந்த நோயும் தன்னை அணுக முடியாது என வாலிபர் போல் ஆரோக்கியமாக இருக்கிறார். தனது உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை உணவு பழக்கம், அதிகாலை நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி ஆகியவையே கைகொடுத்ததாக சின்னராஜா தெரிவித்தார். தற்போதும் புத்தகங்கள் படிப்பதை இந்த 103 வயது இளைஞர் சின்னராஜா வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: