நீலகிரி மாவட்டத்தில் உறைபனி பொழிவு அதிகரிப்பால் தேயிலை செடிகள் கருக தொடங்கின: விவசாயிகள் கவலை

ஊட்டி: நீலகிரி  மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத  துவக்கத்தில் பனிபொழிவு துவங்கும். இம்முறை பனிப்பொழிவு சற்று தாமதமாக  டிசம்பர் 2வது வாரத்தில் துவங்கியது. ஆரம்பம் முதலே உறைப்பனி பொழிவு  கொட்டியது. ஊட்டி அருகே தலைக்குந்தா, சோலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி முதல் மைனஸ் 1 டிகிரிக்கும் கீழ் சென்றது. இம்மாத  துவக்கத்தில் சில நாட்கள் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக நீலகிாி மாவட்டத்தில் மீண்டும் உறைபனி பொழிவு கடுமையாக இருந்து வருகிறது. தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம், தலைகுந்தா, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் உறைபனி கொட்டுகிறது.

உறைபனி பொழிவு காரணமாக புற்கள், செடி கொடிகள் கருக  துவங்கியுள்ளன. கடந்த ஆண்டு பெய்த பருவமழைகளால் தேயிலை செடிகள் இலைகள்  வளர்ச்சியடைந்து வந்த நிலையில், உறைபனியால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும்  பல ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலை செடிகள் கருகி துவங்கியுள்ளன. நடுவட்டம்,  சோலூர், ஊட்டி, கரும்பாலம், காட்டேரி, எல்லநள்ளி, வேலிவியூ  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் கருகியுள்ளன. இதனால்  விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல்  சில தாழ்வான பகுதிகளில் காய்கறி தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி  செடிகளும் கருக துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: