திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்த மாட வீதிகள்: தேரோட்டத்துக்கு முன் சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடக்கின்றன. இதற்காக நான்கு மாடவீதிகள், ஓஎம்ஆர் சாலை உள்பட பல்வேறு தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கப்படுகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாமல் ஆபத்தான முறையில் திறந்து கிடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், வரும் பிப்ரவரி 7ம் தேதி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரமோற்சவம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 13ம் தேதி நடைபெற உள்ளது.

அன்று நான்கு மாடவீதிகளிலும் பிரமாண்ட தேரோட்டம் நடக்கும். தற்போது நடந்து வரும் பாதாள சாக்கடைப் பள்ளங்களால் தேரோட்டம் பாதிக்கப்படலாம் அச்சம் எழுந்துள்ளது. இதனால், இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நான்கு மாடவீதிகளிலும் பாதாள சாக்கடை பள்ளங்கள் மற்றும் மூடிகளை தரமானதாக அமைத்து,  புதிய சாலை அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் பெய்த மழைநீர், சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கியுள்ளது. இதனால், பாதசாரிகள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். தற்போது, அதில் உள்ள மழைநீர் வற்றினாலும், பள்ளங்கள் அப்படியே குண்டும் குழியுமாக உள்ளது. இதில், தேர்பவனி எப்படி நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, பிரமோற்சவ விழா பொதுமக்கள், பக்தர்கள் இன்றி உற்சவதாரர்கள், திருப்பாதம் தாங்கிகள், கோயில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாவை சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் உற்சவதாரர்களும், கோயில் திருப்பாதம் தாங்கிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து செல்லலாம். மேலும், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கழிப்பறை, குடிநீர், பொது சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளவும், திருவிழா நாட்களில் தீயணைப்புத் துறை வாகனத்தை நிறுத்தி வைக்கவும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை கடுமையாக கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: