×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளால் எளிமையாக நடந்த குடியரசு தினவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் குடியரசு தினவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், எஸ்பி சுதாகருடன் திறந்த ஜீப்பில் காவல்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 அதிகாரிகள், காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 228 அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 5 பேருக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் ஆர்த்தி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கொரோனா விதிகளை கடைபிடித்து, கடந்த ஆண்டை போலவே இந்தாண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டன.

மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டு, கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளின் வீடுகளுக்கு சென்று வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மூலம் அவர்களுக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் டிஐஜி சத்தியபிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் ஆர்டிஓ ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. கலெக்டர் ராகுல்நாத் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து, எஸ்பி அரவிந்தனுடன், திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 50 பேருக்கு ரூ.42 லட்சத்தில்  அரசு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள்,  பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து முதலமைச்சரின் காவலர் பதக்கம் 22 பேருக்கு, நற்சான்று விருது 245 பேருக்கு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 2022-2023 ஆண்டிற்கான மகிழ் கணிதம் கேடயம் மற்றும் சான்று 9 பேருக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறந்த மருத்துவமனைக்கான நற்சான்று 2 மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் ஆதரவற்ற விதவை சான்று 3 பேருக்கு உள்பட மொத்தம் 50 பேருக்கு ரூ.42,30,669 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், ஏஎஸ்பி ஆதார்ஸ் பச்சேரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், ஆர்டிஓக்கள் அறிவுடைநம்பி, சாகிதாபர்வீன், சரஸ்வதி, முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மேரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ராஜலட்சுமியும், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், டீன் முத்துகுமரன், செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் சாகிதா பர்வீன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். கொரோனா தொற்று காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதால். எளிய முறையில் அந்த அந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

திருப்போரூர்: நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் செயல் அலுவலர் குணசேகரன் தேசிய கொடியேற்றினார். திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் தேசியக் கொடியேற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமளா, பஞ்சு, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சத்யா சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் கொடியேற்றினார். திருப்போரூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் அஸ்கர் அலி, கணேசன் ஆகியோர் தேசிய கொடியேற்றினர். இதில் தலைமை ஆசிரியர்கள் அசோகன், லல்லி உள்பட பலர் கலந்துக் கொண்டனர். திருப்போரூர் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஸ்டெல்லா கொடியேற்றினார். திருப்போரூர் ஒன்றியத்தின் 50 ஊராட்சிகளிலும் சமீபத்தில் தேர்தல் நடந்து புதிதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நேற்று 50 ஊராட்சி மன்ற தலைவர்களும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தேசிய கொடியேற்றினர்.

மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார். மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் குடியரசு தினத்தையொட்டி வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது. அலுவலக வளாகத்தில் தேசியகொடியை ஆணையாளர் ந.அருள் ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சென்னை திருச்சி- தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவில் மரக்கன்று நட்டார். இதில் பொறியாளர் கௌரி, சுகாதார அலுவலர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ், மாருதி, மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் மைதிலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* தேசிய கொடியேற்றிய பழங்குடி பெண்
கரும்பாக்கம்  ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ஏழுமலை தேசிய கொடியை அதே கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கன்னியம்மாள் என்பவரை ஏற்ற வைத்தார். இதற்கு அப்பகுதி  கிராம மக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் பாராட்டி, வாழ்த்து  தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத  நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags : Republic Day ,Kanchipuram ,Chengalpattu , Republic Day celebrated simply by corona restrictions in Kanchipuram and Chengalpattu districts
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...